யாழ் பெற்றோரே அவதானம்!!
யாழ் நகர்ப்பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் கற்கும் 16 வயதான மாணவன் தனது வீட்டு அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 25 ஆயிரம் ரூபா பணத்தை யாருக்கும் தெரியாது பாடசாலைக்கு கொண்டு சென்று செலவு செய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த மாணவன் அந்தப் பணத்தை எதற்காகச் செலவு செய்தார் என்பது தெரியாது பெற்றோர் மற்றும் பாடசாலை நிர்வாகம் குழம்பியுள்ளது.
யாழ் வலிகாமம் பகுதியில் வசிக்கும் அரச உத்தியோகத்தர்களின் 2 வது மகனான குறித்த மாணவன் பிரபல பாடசாலையில் ஓ.எல் கற்று வருகின்றார்.
கடந்த திங்கட்கிழமை வீடு திருத்த வேலைகளுக்காக வங்கியிலிருந்து 2 லட்சம் ரூபாவை எடுத்து வந்து வீட்டு அலுமாரியில் தந்தை வைத்திருந்துள்ளார். அடுத்த நாள் நண்பகல் குறித்த பணத்தை எடுத்த போது அதில் 5 ஆயிரம் தாள்கள் 5 காணாமல் போனதால் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
குறித்த பணத்தை ஏ.ரி.எம் இல் எடுத்த போது எண்ணாமலே அதனை அப்படியே கொண்டு வந்து வைத்ததால் வங்கி ஏ.ரி.எம் தவறு செய்துள்ளதாக நினைத்துள்ளார் தந்தை. இததையடுத்து தான் பணம் எடுத்து வந்த ஏ.ரி.எம் உள்ள வங்கியில் சென்று தனது பணம் 25 ஆயிரம் குறைவதாக கூறி விசாரித்துள்ளார்.
ஆனால் அவர்கள் அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்கள். அதன் பின்னர் மனைவி அலுவலகத்தால் வந்த பின்னர் வீட்டில் கடும் தேடுதல் நடாத்தப்பட்டது. பின்னர் தனது பிள்ளைகளிடம் விசாரணை செய்யப்பட்டது.
இதன் போது மூத்த மகள் தனது தம்பி அலுமாரியை திறந்து பார்த்ததாக கூறியதை அடுத்து தம்பியிடம் விசாரணை நடாத்தப்பட்டது. முதலில் தான் பணத்தை எடுக்கவில்லை என கூறிய மகன் பின்னர் தந்தையின் தாக்குதலை அடுத்து தான்தான் அதனை எடுத்ததாக ஒப்புக் கொண்டான்.
குறித்த பணத்தை எடுத்துக் கொண்டு பாடசாலைக்கு சென்றதாகவும் ஆனால் அங்கு பணம் தொலைந்து விட்டதாகவும் கூறியுள்ளான். இருப்பினும் அதனை நம்பாது மகனையும் அழைத்துச் சென்று பாடசாலைக்கு தந்தை சென்றுள்ளார்.
அங்கு வைத்து விசாரணை செய்த போதும் குறித்த பணம் தொலைந்து விட்டதாகவே மகன் கூறியுள்ளான். எதற்காக அந்தப் பணத்தை எடுத்துச் சென்றாய் என்று கேட்டதற்கு சரியான பதிலை மகன் வழங்கவில்லை என தெரியவருகின்றது.
பாடசாலை அதிபர் உட்பட பலர் அச்சுறுத்தி கேட்டும் பாடசாலையை விட்டு துரத்தப் போவதாக கூறியும் குறித்த மாணவன் தனது வீட்டில் இருந்து பணத்தை எதற்காக திருடிக் கொண்டு பாடசாலைக்கு சென்றான் என்பதை அவனிடமிருந்து இதுவரை அறியமுடியவில்லை.
அத்துடன் குறித்த வகுப்பு மாணவர்களிடமும் கடும் விசாரணைகள் நடாத்தியும் அந்த மாணவன் பணம் கொண்டு வந்து தொலைத்த விடயம் அவர்களுக்கு தெரியாது இருந்துள்ளது விசாரணைகளிலிருந்து அறியவந்துள்ளது.
மாணவன் பணத்தை தொலைத்தானா? அல்லது வேறு ஏதாவது தேவைகளுக்காக அதனைச் செலவு செய்தானா? என்பது தெரியாது பெற்றோர் குழம்பியுள்ளார்கள்.
தற்போது மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை மற்றும் தவறான செயற்பாடுகள் கடுமையான முறையில் அதிகரித்துள்ளதால் மாணவர்கள் தொடர்புாக பெற்றோர் கடும் அவதானத்தைச் செலுத்த வேண்டும் என கல்விச்சமூகம் கேட்டுள்ளது.