யாழில் அதிஸ்டத்தை நம்பி 18 லட்சத்தை இழந்த நபர்!
யாழ்ப்பாணத்தில் 18 இலட்ச ரூபாயை மோசடி செய்த குற்றத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு, தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர்,
தன்னை தனியார் தொலைத்தொடர்பு நிலையமொன்றின் பிரதிநிதி என கூறி, தங்கள் நிறுவனத்தால் நடத்தப்பட்ட பரிசு குலுக்கலில், உங்களுக்கு பெருந்தொகை பணம் விழுந்துள்ளது.
அந்த பணத்தினை பெற வரியாக 18 இலட்ச ரூபாயை செலுத்த வேண்டும்.
18 இலட்ச ரூபாயை செலுத்தினால் பரிசு பணத்தினை பெற முடியும் என கூறி, கணக்கிலக்கம் ஒன்றினையும் வழங்கியுள்ளார்.
அதனை நம்பிய நபர் குறித்த கணக்கு இலக்கத்திற்கு 18 இலட்ச ரூபாய் பணத்தினை வைப்பிலிட்டுள்ளார்.
அதன் பின்னர் தன்னுடன் தொடர்பு கொண்ட இலக்கத்திற்கு தொடர்பை ஏற்படுத்த முயன்ற போது, அந்த இலக்கம் செயலிழந்து காணப்பட்டது.
அதனை அடுத்து, குறித்த தனியார் தொலைத்தொடர்பு நிலையத்திற்கு சென்று விசாரித்த போதே தான் ஏமாற்றப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார்,
தென்னிலங்கையை சேர்ந்த நபர் ஒருவரை கைது செய்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் மற்றும் தொடர் விசாரணைகளின் அடிப்படையில்,
கைது செய்யப்பட்ட நபரின் உறவினரான மற்றுமொரு நபரை, மோசடிக்கு துணை போன குற்றச்சாட்டில் கைது செய்துள்ளனர்.