போராளிகளைப் போல் சயினட் குப்பியுடன் வணக்கம் செலுத்தியவர்கள் யார்?
உலகெங்கும் வாழும் ஈழத்தமிழ் மக்கள் நேற்று (27) மாவீரர்நாளை அனுட்டித்தனர். மாவீரர்நாளை தடைசெய்வதில் அரச நிர்வாகம் தீவிரம் காட்டியிருந்த போதும், வடக்கு கிழக்கில் மக்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இம்முறை மாவீரர்நாளை தடைசெய்ய பொலிசார் தீவிர முயற்சியெடுத்தனர். பல பகுதிகளில் பொலிசாரின் தடைக்கோரிக்கைகளை நீதிமன்றங்கள் நிராகரித்திருந்தன. சில பகுதிகளில் சில நிந்தனைகளுக்குட்பட்டு, அஞ்சலி நிகழ்வுக்கு அனுமதியளித்திருந்தது.
விடுதலைப் புலிகள் அமைப்பின் இலட்சினைகள், சின்னங்கள் மற்றும் பொருட்களை பயன்படுத்தி அஞ்சலி செலுத்தக்கூடாது, தடைசெய்யப்பட்ட அந்த அமைப்பை மீளுருவாக்கும் செயற்பாடுகளை தூண்டக்கூடாது என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது.
பொலிசாரின் கெடுபிடிகளுக்கும் மத்தியிலும் பெரும் தொகையான மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். நேற்றைய மாவீரர்நாள் நிகழ்வில் சிறுவர்கள் அஞ்சலி செலுத்தும் புகைப்படமொன்று கவனம் பெற்றுள்ளது.<
யாழ்ப்பாணம், கோப்பாய் துயிலுமில்லத்தில் 3 சிறார்கள் அஞ்சலி செலுத்திய புகைப்படமே கவனம் பெற்றுள்ளது. அவர்களில் 2 சிறுமிகள், விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் போராளிகளை போல ஆடை அணிந்திருந்தனர். விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகள் கழுத்தில் சயனைட் குப்பி அணிந்திருப்பதை போல உருவகப்படுத்தி, 3 சிறார்களும் கழுத்தில் குப்பியொன்றை அணிந்திருந்தனர்.
இந்த புகைப்படம் நேற்றிலிருந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களும் எழுந்துள்ளது.