தாக்குதலில் ஈடுபட்ட காவாலிகள் வாகனத்துடன் புதுக்குடியிருப்பில் கைது!

தாக்குதலில் ஈடுபட்ட காவாலிகள் வாகனத்துடன் புதுக்குடியிருப்பில் கைது!

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை மற்றும் மல்லாகம் பகுதியில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட வன்முறை கும்பல் பயணித்த வாகனம் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ளதுடன் , புதுக்குடியிருப்பில் மறைந்திருந்த இரு சந்தேகநபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக, நேற்று முன்தினம் திங்கட்கிழமை இளைஞன் ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து, ஹயஸ் ரக வாகனத்தில் காங்கேசன்துறை – யாழ்ப்பாண வீதியில் தப்பியோடி மல்லாகம் பகுதியில் , வாகனத்தை விட்டு இறங்கி வன்முறையில் ஈடுபட்டு , வீதியில் சென்றவர்களை வாள்களை காட்டி அச்சுறுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.

அது தொடர்பில் மல்லாகம் சந்தியில் கடமையில் நின்ற பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்த போது , வன்முறை கும்பல் வாகனத்தில் ஏறி தப்பி சென்றுள்ளனர்.

தப்பியோடிய வாகனத்தை நோக்கி பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட போதிலும் , வன்முறை கும்பல் தப்பியோடி இருந்தது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் , யாழில் இயங்கும் வன்முறை கும்பலை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டு , நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ள சந்தேகநபர் ஒருவரை தெல்லிப்பழை பொலிஸார் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணைகளை முன்னெடுத்து, வாக்கு மூலங்களை பதிவு செய்த பின்னர் அவரை விடுவித்து இருந்தது.

அதேவேளை , தெல்லிப்பழையில் வாள் வெட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞன் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் , வன்முறையில் ஈடுபட்ட கும்பலை பொலிஸார் அடையாளம் கண்டு இருந்தனர்.

அத்துடன் , தெல்லிப்பழை முதல் சுன்னாகம் வரையிலான வர்த்தக நிலையங்களில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு (CCTV) கமரா பதிவுகளை ஆய்வு செய்ததன் மூலம் , வன்முறை கும்பல் பயணித்த வாகனத்தை அடையாளம் கண்டு இருந்தனர்.

அதன் அடிப்படையில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , வாகனத்துடன் , சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் , பதுங்கி இருந்தப்பதாக பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வாகனத்தை மீட்டதுடன் , அங்கு பதுங்கியிருந்த இருவரையும் கைது செய்து யாழ்ப்பாணம் அழைத்து வந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை குறித்த வன்முறை சம்பவமானது , யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் கனி, மற்றும் ஜெகன் ஆகிய இரண்டு வன்முறை கும்பலுக்கு இடையில் நீண்ட காலமாக நிலவி வரும் மோதல் சம்பவத்தின் தொடர்ச்சியே என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.