கள்ள விசாவில் இத்தாலி செல்ல முயன்ற யாழ், கிளிநொச்சி யுவதிகள் கைது!

கள்ள விசாவில் இத்தாலி செல்ல முயன்ற யாழ், கிளிநொச்சி யுவதிகள் கைது!

மோசடியான முறையில் தயாரிக்கப்பட்ட விசாக்களை பயன்படுத்தி இத்தாலி செல்ல முயன்ற இலங்கை பெண்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவர் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் எனவும், மற்றைய பெண் யாழ்ப்பாணம் வெல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் இருவரும் QR- 659 என்ற கட்டார் ஏர்வேஸ் விமானத்தில் டோஹா நோக்கி அதிகாலை 03.25 க்கு புறப்படுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.

அங்கு, விமான அனுமதிக்காக அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்களில் சந்தேகம் அடைந்த கத்தார் ஏர்வேஸ் அதிகாரிகள், இருவரையும் விமான நிலைய குடிவரவு மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அங்கு நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, ​​தவறான தகவல்களை உள்ளடக்கி மோசடியான முறையில் இந்த இத்தாலி விசாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதன்படி, குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இந்த இரண்டு பெண்களும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இவ்வருடத்தில் வட மாகாணத்தில் வசிப்பவர்கள் மோசடியான ஆவணங்களைப் பயன்படுத்தி ஐரோப்பிய நாடுகளுக்குத் தப்பிச் செல்ல மேற்கொண்ட 10 முயற்சிகள் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் முறியடிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்லும் வடமாகாண வாசிகள் டோஹா மற்றும் டுபாய் குடிவரவு அதிகாரிகளினால் மேலும் பல சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டு அவர்களை மீண்டும் இந்த நாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.