வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை! நீதவான் சிறைச்சாலைக்கு நேரில் சென்று விசாரணை!
வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை தொடர்பில் யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் சிறைச்சாலைக்கு நேரில் சென்று வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்டுள்ளார்.
அதேவேளை உயிரிழந்த இளைஞனுடன் கைது செய்யப்பட்ட மற்றைய இளைஞனிடமும் வாக்கு மூலம் பெற்றுக்கொள்வதற்காக நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை மன்றில் முன்னிலையாகுமாறு இளைஞனுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் பொலிசாரின் சித்தரவதை காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.
இளைஞனின் உயிரிழப்பு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் இடம்பெற்றமையால் , இளைஞனின் உயிரிழப்பு தொடர்பிலான விசாரணைகள் யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ ஆனந்தராஜா முன்னிலையில் இடம்பெற்று வருகின்றன.
இளைஞனின் உடற்கூற்று பரிசோதனைகள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மதியம் யாழ்.போதனா வைத்தியசாலையில், சட்ட வைத்திய அதிகாரி உ. மயூரதன் மேற்கொண்ட போது, நீதவான் வைத்தியசாலைக்கு நேரில் சென்று சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிசோதனைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
தொடர்ந்து சிறைச்சாலைக்கு நேரில் சென்று சிறைச்சாலை அத்தியட்சகர் , உத்தியோகஸ்தர்கள் , உள்ளிட்டவர்களிடம் வாக்கு மூலங்களையும் பெற்றுக்கொண்டார்.
உயிரிழந்த இளைஞனின் குடும்பத்தினர் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி வி.திருக்குமரன், சட்டத்தரணி ரிஷிகேஷவன், மற்றும் சட்டத்தரணி மயூரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை உயிரிழந்த இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞன் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் செவ்வாக்கிழமை முற்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்றினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த இளைஞன் மற்றும் அவரது நண்பரான மற்றைய இளைஞன் ஆகியோர் மீது நகை திருட்டு குற்றச்சாட்டு சுமத்தி வட்டுக்கோட்டை பொலிஸாரினால் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்திய போது இருவரையும் மன்று விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து இருவரும் , யாழ்ப்பாண சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலே அலெக்ஸ் எனும் இளைஞன் உயிரிழந்தார். மற்றைய இளைஞன் தொடர்ந்து சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த நிலையிலே நேற்றைய தினம் நீதிமன்றம் அவரை பிணையில் செல்ல அனுமதித்தது.