ஆலமரத்தை அகற்றும் முயற்சிகளை கைவிடுக
kili
-வீதி அபிவிருத்தி திணைக்களத்திடம் ஐங்கரநேசன் அவசர வேண்டுகோள்-
கிளிநொச்சி- திருநகர் வீதியை இரட்டை வழிச்சாலையாக அபிவிருத்தி செய்யும்
பொருட்டு அங்குள்ள நூறு ஆண்டுகளுக்கும் பழமையான ஆலமரத்தை வெட்டி
வீழ்த்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அபிவிருத்தி
என்ற பெயரில் இத்தகைய மூத்த மரங்களை அழிப்பது நாம் வாழும் சூழலுக்கு
நாம் செய்யும் பெரும் துரோகம் ஆகும். இம் மரத்தின் சூழலியல் முக்கியத்துவத்தையும்
இம் மரத்தைக் காப்பாற்றுமாறு மக்கள் விடுத்துள்ள அவசரக்கோரிக்கையையும்
கருத்திற்கொண்டு வீதி அபிவிருத்தித் திணைக்களம் இவாலமரத்தை அகற்றும்
முயற்சிகளை உடனடியாகக் கைவிட்டு வீதி அகலிப்புக்கான மாற்று
வழிகளை நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும் என்று தமிழ்த் தேசியப் பசுமை
இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிளிநொச்சி- திருநகர் வீதியில் உள்ள பழமை வாய்ந்த ஆலமரத்தை அகற்றம்
முயற்சிகளைக் கண்டித்து பொ. ஐங்கரநேசன் விடுத்திருக்கும் ஊடக
அறிக்கையிலேயே இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார். அந்த அறிக்கையில்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் மகப்பெரும் அச்சுறுத்தலாக மாறிவரும்
சூழ்நிலையில் இப் பகுதியைக் கடுமையான வெப்ப அலையில் இருந்து பாதுகாத்துத்
தருவது இந்த நூற்றாண்டுகால ஆலமரமே ஆகும். ஒரு நூற்றாண்டுகால ஆலமரம்
தன் வாழ்நாளில் தொன்கணக்கிலான காபனீரொட்சைட்டு வாயுவை உறிஞ்சி
அதன் தண்டு மற்றும் வேர்களில் சேமித்து வைத்துள்ளது.
இம்மரத்தை வெட்டி அழிக்கும்போது இக்காபன் அனைத்தும் வளிமண்டலத்துள்
வெளியாகி சூழலின் வெப்பநிலையை மேலும் அதிகரிக்கச்செய்வதாக அமையும்.
இப்பெரும் ஆலமரம் போக்குவரத்து நெரிசல் மிக்க திருநகர் வீதியின் கரிக்காற்றை
உறிஞ்சி சுத்தமான பிராணவாயுவை விடுவிக்கும் ஓர் இயற்கைக் காற்றுச்
சுத்திகரிப்பானாகும். அத்தோடு, இம்மரம் பறவைகள், வெளவால்கள், பூச்சிகள்
உட்பட பலநூற்றுக்கணக்கான உயிரினங்களுக்கு வாழிடமும் உணவும் அளிக்கும்
ஒரு மையக்கல் (Keystonespecies) இனமாகவும் விளங்குகிறது.
இம் மரம் அழியும்போது இதனை நம்பிவாழும் பலநூற்றுக்கணக்கான
உயிரினங்களின் வாழ்வும் பெரும் கேள்விக்குள்ளாகும். இம்மரத்தை அழிப்பது ஒரு
முழுமையான அமைப்பையே அழிப்பதற்குச் சமமாகும். உலகம் பூராவும் தாவர
உலகின் மூத்த குடிமக்களாக விளங்கும் இத்தகைய மரங்கள் பேணிப்
பாதுகாக்கப்படுகின்றன. ஆனால், நாம் சூழற் சமநிலையில் மூத்த மரங்களின்
அவசியம் குறித்து விழிப்புணர்வு அற்றவர்களாகவே இருந்து வருகிறோம்.
அபிவிருத்தி அவசியமானது. அதே சமயம் அபிவிருத்தி இயற்கையோடு இயைந்ததாக
இருக்க வேண்டியதும் அவசியமாகும்.அப்போதே அவ்வபிவிருத்தி நிலையான
அபிவிருத்தியாக அமையும். எனவே சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள்
இம்மரத்தை அகற்றும் முயற்சிகளைக்கைவிட்டு மாற்று வழிமுறைகளில் சாலையை
அமைப்பதற்கு முன்வர வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.