இராணுவத்தளபதியை நியமித்த துவாரகா: காதல் மோசடி ராணி தலைவரின் புதல்வியாக்கப்பட்ட கதை இதோ!
இலங்கை மீது அணுகுண்டு தாக்குதல் நடத்த திட்டம்… இப்படியொரு செய்தியை அறிந்தால், பயம் வருவதற்கு பதிலாக சிரிப்புத்தான் வருமல்லவா!. இது ஏதோ நகைச்சுவை செய்தியென எடுத்து விடாதீர்கள். உண்மையிலேயே இலங்கை மீது அணுகுண்டு தாக்குதல் நடத்த ஒரு குழு தீவிரமாக… சிரிக்காமலிருந்து பயங்கரமாக திட்டமிட்டது.
இதென்ன, வடிவேலுவின் காமெடி ஸ்கிரிப்ட்டை செய்தியென்ற பெயரில் அப்டேட் செய்து விட்டார்களோ என நீங்கள் சந்தேகமாக பார்ப்பது புரிகிறது. ஆனால், இதில் எங்கள் பங்கென்று எதுவும் கிடையாது. எல்லாமே நம்மாட்களின் உருட்டல் பிரட்டல்கள் பற்றிய உண்மைச் செய்திகள்தான்.
நம்மவர்கள் எங்கே, எப்பொழுது அணுகுண்டு தாக்குதலுக்கு திட்டமிட்டார்கள்?, இந்த அணுகுண்டு அப்துல்கலாம்களின் பிந்தைய தில்லாலங்கடி மோசடியான போலித் துவாரகா விவகாரம் பற்றிய பல திடுக்கிடும், சுவாரஸ்ய, சிரிப்பூட்டும் தகவல்களை இந்த பகுதியில் எக்ஸ்குளுசிவாக தருகிறோம்.
கடந்த மாவீரர்தினத்திலன்று. விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் மகள் துவாரகா உரையாற்றுவார் என ஒரு குழுவினர் பிரச்சாரம் மேற்கொண்டு, துவாரகா என்ற பெயரில் மோசடியான பெண்ணொருவர் உரையாற்றிய சர்ச்சைச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.
மாவீரர்தினத்திலன்று உரையாற்றியவர் போலித் துவாரகா என்பது பெரும்பாலானவர்கள் அறிந்திருக்கிறார்கள் என்பது சமூக ஊடகங்களை அவதானிப்பவர்களிற்கு புரிந்திருக்கும். என்றாலும், இன்னும் சிலர்- குறிப்பாக புலம்பெயர்ந்த தேசங்களில் இருப்பவர்கள்- இந்த மோசடி நாடகத்திற்கு பலியாகி பணத்தை இழக்கும் அபாயமுள்ளதால், இந்த போலி நாடகத்தின் விலாவாரியான பின்னணியை இந்த பந்தி வெளிப்படுத்துகிறது.
இந்த மோசடி கும்பல் கடந்த பல மாதங்களாக திரைமறைவில் நடத்த ஆரம்பித்த மோசடி நாடகம் குறித்து கடந்த பெப்ரவரி மாதம் இந்தப் பக்கம் வெளிப்படுத்தியிருந்தது. துவாரகா என்ற பெயரில் மோசடி பெண்ணொருவர் முக்காடு அணிவிக்கப்பட்டு, பணம் சேகரிக்கும் உலகமகா உருட்டு பற்றி முதல்முதலாக இந்தப் பக்கம் வெளிப்படுத்தியிருந்தது. விரிவாக படிக்க- தலைவர் குடும்பம் பிரிட்டனில் தலைமறைவாக வாழ்கிறது: முக்காட்டுடன் வந்த மனைவி, மகள் துவாரகா; சுவிஸில் வாழ்வாதார நிதி சேகரித்த மோசடிக்கும்பல்!
இந்த மோசடி கும்பலின் பின்னணியில் உள்ளவர்கள், இந்த மோசடியில் ஈடுபடும் பெண் பற்றிய பல்வேறு தகவல்களை தற்போதும் இந்தப் பக்கம் வெளிப்படுத்துகிறது.
அதுவரை, சுவிற்சர்லாந்தில் தொடங்கி, ஐரோப்பாவின் பல நாடுகளில் உள்ள தமிழ் உணர்வாளர்கள், வர்த்தகர்களிடம் பணம் சேகரித்து மோசடியில் ஈடுபட்டது இந்த கும்பல். பெண்ணொருவர் முக்காடு இட்டு, நிதி சேகரிக்கும் இந்த கும்பல் மோசடியானது என்ற தகவல் பரவியதும் புலம்பெயர் தேசங்களில் இருக்கும் பலரும் எச்சரிக்கையடைந்தனர்.
இதன் பின்னரே, இந்த மோசடி நாடகத்திற்குள் நெடுமாறன், பிரபாகரனின் மனைவியின் சகோதரி அருணா உள்ளிட்ட வெளியாட்கள் அழைத்து வரப்பட்டனர். நெடுமாறனின் அறிக்கை, அதை தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சைகள் எல்லாவற்றையும் வாசகர்கள் அறிந்திருப்பீர்கள்.
அதன் பின்னர், பிரபாகரன் இருக்கிறார், துவாரகா இருக்கிறார் என நெடுமாறன் தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறார். நெடுமாறன் ஏன் இப்படி சொல்கிறார்?, அவரும் பண மோசடியில் தொடர்புபட்டவரா என்ற குழப்பம் பலருக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரமளவில், நெடுமாறனின் குடும்ப உறுப்பினர் ஒருவருடன் ஈழத்தமிழ் செயற்பட்டாளர் ஒருவர் பேசினார். நெடுமாறன் தற்போது வெளியிடும் கருத்துக்களால் தன் பற்றிய பிம்பத்தை கெடுத்துக் கொள்கிறார், அவர் ஏன் இப்படி செயற்படுகிறார் என ஆதங்கப்பட்டுள்ளார்.
அந்த குடும்ப உறுப்பினர் அளித்த பதில்- “அவர் சும்மா சொல்லவில்லை. பிரபாகரன் குடும்ப உறுப்பினர் ஒருவர் மூலம் துவாரகா பேசினார். அதன் பின்னர்தான் இதை பகிரங்கப்படுத்தினார்“ என்றார்.
தமிழ் அரசியல் பரப்பில் எதையும் வெளிப்படையாக பேசும் அரசியல்வாதியான எம்.கே.சிவாஜிலிங்கமும், துவாரகா என குறிப்பிடும் ஒரு பெண் தன்னுடன் பேசியதாக தெரிவித்திருந்தார். ஆனால், அவர் துவாரகா உயிருடன் இருக்கிறார் என அழிச்சாட்டியம் செய்யவில்லை. துவாரகா என கூறும் பெண்ணின் மரபணு பரிசோதனை மூலம் உண்மையை உறுதிப்படுத்த வேண்டுமென்றுதான் குறிப்பிட்டார்.
என்றாலும், சில அவசரக்குடுக்கைகள் மோசடியாளர்கள் பட்டியலில் நெடுமாறன், காசியானந்தன், சிவாஜிலிங்கம் போன்றவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு, அவர்களும் சேர்ந்து ஆடும் நாடகம் என குறிப்பிட்டிருந்தனர். அது தவறானது.
துவாரகா சர்ச்சையையடுத்து, ஒரிரு நாட்களின் முன்னதாக சிவாஜிலிங்கத்தை தொடர்பு கொண்ட போது, அவர் பின்வருமாறு தெரிவித்தார்-
“அண்மையில் ஒருநாள் தலைவரின் மனைவி மதிவதனியின் சகோதரியான அருணா (டென்மார்க்கில் வசிப்பவர்) தொலைபேசியில் தொடர்பு கொண்டார். பொதுவாக பேசிவிட்டு, துவாரகா பேச விரும்புகிறார், அவருடன் பேசுகிறீர்களா என கேட்டார். அவர் அப்படி கேட்கும் போது ஏன் மறுக்க வேண்டும்?. சரியென்றேன். 5 நிமிடங்கள் அளவில் கொன்பிரன்ஸ் அழைப்பில் ஒரு பெண் பேசினார். தன்னை துவாரகா என்றார். தனது பேரன், பேர்த்தியின் (வேலுப்பிள்ளை, பார்வதியம்மா) இறுதிக்கிரியைகளை செய்ததற்காக குடும்பத்தின் சார்பில் நன்றி சொன்னார். பின்னர், எனது உடல் நலத்தை பற்றி பேசினார். உடலை கவனிக்குமாறு சொன்னார். அவரது பேச்சில், அடிப்படை மருத்துவ அறிவு இருப்பது போல தெரிகிறது என்றேன். பல்கலைக்கழகமொன்றில் படித்து வைத்தியராகி விட்டேன் என்றார். மேலதிகமாக நான் எதையும் கேட்கவில்லை“ என்றார்.
நெடுமாறன் குறிப்பிடும் போது, பிரபாகரன் குடும்ப உறுப்பினர் ஒருவர் மூலம் துவாரகா பேசினார் என்றார். சிவாஜிலிங்கம், அருணா மூலம் துவாரகா என கூறும் பெண் பேசினார் என்றார்.
இந்த சம்பவங்கள் மூலம், அருணா வழியாக தமிழக தலைவர்களை இந்த மோசடிக்கும்பல் அணுகியுள்ளதை உணர முடியும்.
நெடுமாறன், காசியானந்தன் போன்றவர்கள், அருணா வழியாக மோசடிக்கும்பல் அணுகிய போது, உண்மையில் துவாரகா இருக்கிறார் என நம்புவதற்கே அதிக வாய்ப்புள்ளது என்பது புலப்படுகிறதல்லவா!
இலங்கை மீது அணுகுண்டு தாக்குதல்
போலித்துவாரகா நாடகத்தின் பின்னணி செயற்பாட்டாளர்கள் என சமூக ஊடகங்களில் பலரது பெயர்ப்பட்டியல்கள் உலா வருகின்றன. எனினும், அவை இந்த நாடகத்தின் பிரதான பாத்திர சூத்திரதாரிகளின் பட்டியல்கள் அல்ல. இந்த நாடகத்தின் துணை நடிகர்களின் பெயர்களே அவை.
விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்களாக நீண்டகாலமாக அறியப்பட்ட அந்த நபர்களையே, புலம்பெயர் வாசிகள் அனேகர் அறிந்திருப்பார்கள். அதனால், அவர்கள்தான் இந்த நாடகத்தின் பின்னணியென கருதியிருக்க கூடும்.
துவாரகா நாடகத்தின் பின்னணியை அறிய வேண்டுமெனில், சில வருடங்களிற்கு முந்தைய சம்பவங்களிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.
2014 ஏப்ரல் மாதம் தெய்வீகன், அப்பன், கோபி என்ற 3 விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் வவுனியா வடக்கு நெடுங்கேணியில் உயிரிழந்தனர், விடுதலைப் புலிகள் அமைப்பை மீள கட்டியெழுப்ப முயன்றவர்களை, மோதலில் கொன்றதாக இராணுவம் அறிவித்தது. புலம்பெயர் குழுவொன்று, மூவருக்கும் இராணுவ படிநிலை வழங்கி, மாவீரர்களாக அறிவித்தது.
தெய்வீகன், அப்பன், கோபி ஆகியோரின் புலிகளை மீளுருவாக்கும் முயற்சியை ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஆதரித்தது, 2009 இன் பின் அந்த நாடுகளிற்கு சென்ற விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகள்.
இன்னும் தெளிவாக சொன்னால்- புலிகளின் தலைவர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் அணி, விமான எதிர்ப்பு பிரிவு உள்ளிட்ட முக்கிய பிரிவுகளிலிருந்து, யுத்தத்தின் இறுதியில் தப்பித்து வெளிநாடுகளுக்கு சென்றவர்கள். அதுவரை வெளிநாடுகளில் நிதி சேகரித்து, புலியாக அறியப்பட்டவர்கள் எல்லோரையும் பின்னால் தள்ளி, இந்த புதிய குழுவே தீவிரமாக செயற்பட்டது.
தெய்வீகன் குழுவின் மூலம் இலங்கையில் தாக்குதல்கள் நடத்தப் போவதாக குறிப்பிட்டு ஐரோப்பிய நாடுகளில் இந்த குழுவினர் பணம் சேகரித்தனர். அப்போது, சொல்லப்பட்ட கதைதான்- இலங்கை மீது (தென்னிலங்கையில்) அணுகுண்டு தாக்குதல் நடத்தப் போகிறோம், அணுகுண்டு பரிசோதனை, உபகரணங்கள் வாங்க பணம் தேவை, ராஜபக்சக்களை குறிவைக்கப் போகிறோம் என குறிப்பிட்டு பெரும் தொகை பணம் சேகரித்தனர்.
பின்னர் தெய்வீகன் குழுவினர் கொல்லப்பட்ட பின்னர், இந்த குழுவினர் சிறிதுகாலம் அமைதியாக இருந்தனர்.
போலித் துவாரகா
ஒன்றரை வருடங்களின் முன்னர், சுவிஸில் வசிக்கும் சாளி என அறியப்படும் நபர் (அவரது இயற்பெயரை அறிந்து கொள்ள முடியவில்லை) இந்தியா சென்றிருந்தார். அவருக்கு இந்தியாவில் சிறி என்ற நண்பர் உள்ளார்.
தெய்வீகன் குழுவினர் கொல்லப்பட்ட போது, சிறி இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தப்பிச் சென்றவர். தெய்வீகன் குழுவிலிருந்து தப்பித்த ஒரே நபராக சிறியே அறியப்படுகிறார். அவர் தற்போது இந்தியாவில் பண்ணை நடத்தி வருகிறார். இந்தியாவிலுள்ள ஈழ ஆதரவாளர்களுடன் கணிசமான தொடர்புகளையும் ஏற்படுத்தியுள்ளார்.
ஐரோப்பாவில் எழுச்சி பெற்றுள்ள புதிய புலிகள் (2009 இன் பின் இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற- தெய்வீகன் குழுவின் பின்னணியில் செயற்பட்டவர்கள்) தரப்புக்கும், இந்தியாவிலுள்ள ஈழ ஆதரவாளர்களுக்குமிடையில் பாலமாக இருந்தவர்- தற்போதும் இருப்பவர் சிறி.
சாளி, விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் அல்ல. சுவிற்சர்லாந்தில் புலிகளுக்காக நிதி சேகரித்தவர். தெய்வீகன் குழுவுக்காக தீவிரமாக நிதி சேகரித்தவர். அவருக்கு சுவிசில் வர்த்தகங்களும் சொந்தமாக உள்ளது.
அவர் இந்தியாவிலிருந்து திரும்பி சென்ற போதே, துவாரகா கதையுடன் சென்றார்.
தற்போது, துவாரகா நாடகத்தை அரங்கேற்றியுள்ள இந்த புலம்பெயர் முன்னாள் போராளிகள் அணியின் நடவடிக்கை, அந்த குழுவிற்குள்ளேயே கணிசமான குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த குழுவிலுள்ள முக்கிய செயற்பாட்டாளர்கள் சிலர், துவாரகா நாடகத்தை ஆதரிக்கவில்லை.
யாருக்கும் பலனில்லாத- மக்களை குழப்பும் இந்த வகையான நாடகத்தை கைவிடும்படி அவர்கள் வலியுறுத்தி வந்தனர். என்றாலும், அதையும் மீறி தற்போது நாடகம் உச்சக்காட்சியை எட்டியுள்ளது. இதையடுத்து, இந்த குழுவில் அங்கம் வகிக்கும் முக்கியஸ்தர்கள் சிலர் உள்ளக விவகாரங்கள் பலவற்றை வெளிப்படுத்தியுள்ளனர். அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத அந்த பிரமுகர்கள் பகிர்ந்த தகவலின்படி-
“இந்தியாவிலிருந்து சுவிஸ் வந்ததும் சாளி ஒருநாள் அழைப்பேற்படுத்தி, எமது குழுவில் அங்கம் வகிக்கும் பலரை கொன்பிரன்ஸ் கோலில் இணைத்தார். தலைவரின் மகள் துவாரகா உயிருடன் இருக்கிறார், அதை நான் உறுதி செய்தேன் என்றார். எங்கள் சிலருக்கு சந்தேகம்.
ஆனால் நிமலன், மிதுலன், வரதன் போன்றவர்கள் அதை உடனே ஏற்றுக் கொண்டனர். எனக்கு அது ஆச்சரியமாக இருந்தது. இவர்கள் அனைவரும் துவாரகாவை சிறு வயது முதலே அறிந்து பழகியவர்கள்.
யுத்தத்தின் இறுதிவரை களத்தில் நின்றவர்கள். துவாரகா இறந்ததையும் அறிந்தவர்கள். அவர்கள் சாளியுடன் முன்கூட்டியே திட்டமிட்டு, இந்த நாடகத்தை ஆடினார்களோ என்ற சந்தேகம் எங்கள் சிலருக்கு உள்ளது.
அடுத்தடுத்த சில நாளில் துவாரகா என கூறும் பெண்ணை சாளி தொலைபேசியில் பேச வைத்தார். அவர் முதல் முறை பேசும் போதே, நிமலன், மிதுலன், வரதன் போன்றவர்களை அங்கிள் என விளித்தார். துவாரகாவிற்கும் அவர்களிற்குமிடையில் சில வயதுகள் மட்டுமே வித்தியாசம்.
முன்னர் வன்னியிலிருந்த போது அவர்களை துவாரகா அங்கிள் என அழைத்ததில்லையென்பது எங்கள் அனைவருக்கும் தெரியும். அன்று தொலைபேசியில் அங்கிள் என அழைத்த போதே, அது போலி துவாரகா என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் துவாரகா உயிருடன் இருக்கிறார் என மற்றவர்களுக்கு கூற ஆரம்பித்து விட்டனர்“ என்றார்கள்.
பிரித்தானியா, சுவிசிலுள்ள நிமலன், சாளி, வரதன், மிதுலன் போன்றவர்கள்தான் துவாரகா நாடகத்தின் ஆரம்ப சூத்திரதாரிகள்.
தமிழீழத்தை காசு கொடுத்து வாங்கும் திட்டம்
போலி துவாரகா நாடகத்தின் பின்னணியில் தமிழீழத்தை காசு கொடுத்து வாங்கும் திட்டமும் இருந்துள்ளது என்பது எவ்வளவு பெரிய கொடுமையானது!
போலித்துவாரகா நாடகம் ஆரம்பித்த சமயத்தில், நாடகக்குழுவில் ஏனைய போராளிகளை இணைப்பதற்கு இந்த வகையான பொய்யும் சொல்லப்பட்டுள்ளது.
இந்த மோசடி நாடகம் ஆடிய குழுவில் அங்கம் வகித்த சிலர் தற்போது அதிருப்தியடைந்துள்ளனர். பணம் சேர்ப்பதற்காக சூம் கூட்டங்களிற்கு துவாரகா என ஒரு போலிப் பெண்ணை காண்பிக்க அவர்கள் சம்மதம் தெரிவித்திருந்த போதும், துவாரகாவின் பெயரில் மாவீரர் நாள் உரையாற்றும் அளவுக்கு வளர்வதை அவர்கள் விரும்பவில்லை.
இந்த மோசடிக் குழுவில் அங்கம் வகித்த பலருடன் பேசிய போது, தற்போது சுவிசிலுள்ள மிதுலனுடனும் தொடர்பு எடுக்கப்பட்டது. இந்த மோசடிக்குழு பற்றிய பல தகவல்களை வெளிப்படுத்த தயாராக இருப்பதாக குறிப்பிட்டு, சில விவகாரங்களை பேசினார்.
அதிருப்தியடைந்துள்ள ஆதாரமொன்று ஊடகத்திடம் கூறுகையில்- “எமது குழுவினர் ஆரம்பத்தில் பணம் சேர்க்கவே திட்டமிட்டனர். இலங்கை பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இந்த தருணத்தில், நாம் மிகப்பெருமளவில் பணம் சேர்த்து, இலங்கையுடன் பேரம் பேசும் அளவுக்கு வளர வேண்டுமென ஆரம்ப கட்ட கூட்டங்களில் குறிப்பிட்டனர்.
ஆரம்ப கட்டத்தில் திடீரென ஒருநாள்- பணம் சேர்ப்பதற்கும், நாட்டுக்கு நல்லது செய்வதற்கும் சில சின்ன பொய்கள் சொல்வதில் தவறில்லையென சொன்னார்கள். நான் அதை பெரிதாக எடுக்கவில்லை. பின்னர் துவாரகா விவகாரம் எழுந்த போது, அவர்களிடம் கேட்டேன். சில பொய்கள் சொல்வதில் தவறில்லையென ஆரம்பத்திலேயே சொல்லி விட்டோமல்லவா என சாதாரணமாக பதிலளித்தார்கள்“ என்றார்.
இம்ரான்- பாண்டியன் படையணியில் இளநிலை பொறுப்பாளராக இருந்த ஒருவர் தற்போது சுவிசில் வசிக்கிறார். புலம்பெயர்ந்த பின்னர் நெடியவன் குழுவுடன் சேர்ந்தியங்கினார். பின்னர் அவர்களிடமிருந்து ஒதுங்கி, தானும் தன்பாடுமாக இருக்கிறார்.
“சுவிசிலுள்ள அப்துல்லா குழுவினர் ஒருநாள் என்னை தொடர்பு கொண்டு, தம்முடன் சேர்ந்தியங்கலாமென அழைத்தார்கள். அதிக பணம் சேர்த்து இலங்கை அரசுடன் பேரம் பேசும் சக்தியாக நாம் மாற்றமடைய வேண்டுமென்றார். இதற்காக சில பொய்களை சொல்வதில் தவறில்லையென்றார். என்றாலும் நான் அவர்களின் தொடர்பை தவிர்த்து விட்டேன்“ என்றார்.
துவாரகா நியமித்த தமிழீழ இராணுவத் தளபதி
துவாரகா நாடகம் மெதுமெதுவாக ஆரம்பித்த போதும், அவரை யாருக்கும் அறிமுகப்படுத்தவில்லை. சுவிசில் இருக்கிறார் என்று மாத்திரமே சொன்னார்கள். பின்னர் நிமலன், வரத், மிதுலன் உள்ளிட்டவர்கள், தாங்கள் துவாரகாவுடன் நேரிலும், வீடியோவிலும் பேசிவிட்டதாக மற்றவர்களிடம் கூறத் தொடங்கினர்.
விடுதலைப் புலிகள் அமைப்பில் பல்வேறு துறைகளிலும் முக்கிய பொறுப்பு வகித்தவர்கள், பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் பிரிவுகளில் அங்கம் வகித்தவர்கள் பல நாடுகளிலும் சிதறி வாழுகிறார்கள். அவர்களையும், துவாரகா இருக்கிறார் என நம்ப வைப்பதற்காக புதியதொரு நாடகத்தை இவர்கள் ஆடினார்கள்.
சில நாடுகளில் உள்ள மேற்படி போராளிகளை தமது வலையில் விழுத்தியுள்ளனர். இப்படி வலையில் விழுத்தப்பட்டவர்களுக்கு பிரதியுபகாரமாக ஏதாவது வழங்கப்பட்டதா என்பதை ஊடகத்தால் இதுவரை அறிந்து கொள்ள முடியவில்லை.
இப்படியான ஒருவரே- அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஜெயகாந்தன். இம்ரான் பாண்டியன் படையணி தளபதியாக இருந்தவர். அவரும் துவாரகா நாடகக் கம்பனியின் வலையில் சிக்கியவர். அவருடன் பேசி, துவாரகா இருக்கிறார் என குறிப்பிட்டனர். இரண்டு தரப்புக்குமிடையிலான தனிப்பட்ட உரையாடல்- இணக்கப்பாடு பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், சில நாட்களிலேயே, துவாரகா இருக்கிறார் என்ற தகவலை ஜெயகாந்தன் பரப்ப ஆரம்பித்தார்.
அதாவது- துவாரகா நாடகம் ஆரம்பித்த போதே, அதில் நம்பிக்கை கொள்ளாமலிருந்த முன்னாள் போராளிகளை ஜெயகாந்தன் தொடர்பு கொண்டு, துவாரகா இருக்கிறார், நான் அவருடன் வீடியோவில் பேசினேன், அது துவாரகா தான் என உறுதி செய்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
ஊடகத்திடம் பேசிய ஆதாரங்களின்படி, துவாரகா நாடகம் ஆரம்பித்த போது, அந்த குழுவில் அங்கம் வகித்த பலர், போலித் துவாரகாவை வீடியோ அழைப்பில் காண்பதற்கு முன்னர், ஜெயகாந்தன் கண்டுள்ளார்.
இதன் பின்னரே, ஏனையவர்களுடன் வீடியோ அழைப்பில் துவாரகா காண்பிக்கப்பட்டார். ஆரம்ப சந்திப்புக்களில் துவாரகா முக்காடிட்டபடியே காண்பிக்கப்பட்டார். பின்னரே, படிப்படியாக துவாரகாவின் திரை விலகி, முழு மதியையும் கண்டனர்!
இந்த கூத்துக்கள் ஒரு பக்கம் என்றால், மறுபக்கம் இன்னொரு உலக மகா கூத்து நடந்தது.
அதுதான்- தமிழீழ இராணுவத்தளபதி நியமனம்.
பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர்கள், விமான எதிர்ப்பு பிரிவினர், இரட்ணம் மாஸ்டரின் ஆட்கள் என குறிப்பிட்ட சிலரை கொண்ட குழுவொன்றுக்குள்ளேயே இந்த துவாரகா நாடகம் ஆடப்பட்டு கொண்டிருந்தது. அவர்களை கொண்ட வட்ஸ்அப் குழுவொன்றும் இருந்தது.
இந்த குழுவுக்குள் ஒருநாள் திடுதிப்பென ஒரு அறிவிப்பு வெளியானது- அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஜெயகாந்தனை தமிழீழ இராணுவத் தளபதியாக துவாரகா நியமித்துள்ளார் என.
இம்சையரசன் 23ஆம் புலிகேசி பாணியில், இராணுவத் தளபதியும் நியமிக்கப்பட்டாயிற்று!
பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் பிரிவில் நீண்டகாலம் செயற்பட்ட, மெய்ப்பாதுகாவலர் பிரிவுக்கு சில காலம் பொறுப்பாக இருந்த, இம்ரான் பாண்டியன் படையணிக்கு தளபதியாக இருந்த ஜெயகாந்தன்.. போலித் துவாரகாவை எப்படி நம்பினார் என்பதுதான் மில்லியன் டொலர் பெறுமதியான கேள்வி.
துவாரகா வழங்கிய இராணுவத்தளபதி பதவிக்காக மனமறிந்து பொய் சொன்னாரா? அல்லது அவருக்கு பணம் வழங்கப்பட்டதா? அல்லது, போலியானதெனினும், இந்த நகர்வுகளின் மூலம் தமிழ் அரசியலில் ஏதாவது மாற்றத்தை நிகழ்த்த முடியுமென நம்ப வைக்கப்பட்டாரா என்பதற்கான பதிலை ஜெயகாந்தன் வழங்க வேண்டிய காலமொன்று வரும்.
ஜெயகாந்தன் மட்டுமல்ல, இந்த நாடகத்தில் நேரடி பண ஆதாயத்தை பெற்றவர்களை தவிர, ஏதோவொரு நம்பிக்கையுடன் மனமறிந்து பொய் சொன்னவர்கள் அனைவரையும் காலம் ஒருநாள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும்.
முக்காடிட்ட பெண்
வெளிநாடுகளில் உள்ள போராளிகள் மட்டத்தில் துவாரகா இருக்கிறார் என்ற கதை பரப்பப்பட்ட பின்னர், துவாரகாவின் பெயரில் நிதி சேகரிக்கும் மோசடி ஆரம்பமானது. அனேகமாக சூம் வழியாகவே நிதி சேகரிப்பு கூட்டங்கள் நடந்தன. நிதி சேகரிப்பில் அறியப்பட்ட சாளி இதற்கான பிரதான ஏற்பாடுகளை செய்தார். அந்த கூட்டங்களில் துவாரகா என குறிப்பிட்டு, முக்காடு இட்ட பெண்ணொருவர் உட்கார வைக்கப்பட்டிருந்தார்.
அவர், தானே துவாரகா என்றும், தந்தை (பிரபாகரன்), தாய், சகோதரன் இன்னொரு நாட்டில் மறைந்துள்ளதாகவும், அவர்கள் பொருளாதார ரீதியாக சிரமப்படுவதாகவும், மருத்துவ தேவைகள் உள்ளதாகவும் சோகக்கதைகள் சொன்னார். பெரும் தொகை நிதி திரண்டது.
முன்னர் தெய்வீகன், அப்பன், கோபி குழுவினருக்கு நிதி வழங்கியவர்களே அனேகமாக இம்முறையும் கூட்டங்களுக்கு அழைக்கப்பட்டனர்.
அந்த சந்தர்ப்பம் ஒன்றில் சுவிசில் நடந்த நிதி சேகரிப்பு கூட்டத்தில் வர்த்தகர் ஒருவர் சந்தேகமடைந்து, துவாரகாவை நேரில் சந்தித்து பேச விரும்புவதாக கூற, அவர் பிரித்தானியாவுக்கு அழைத்து வரப்பட்டு முக்காடிடப்பட்ட பெண்ணிடம் பேச வைக்கப்பட, அது போலித் துவாரகா என்பதை கண்டறிந்தார். அவர் தனக்கு தெரிந்த வர்த்தகர்களிடம் போலித் துவாரகா பற்றிய தகவல்களை பகிர்ந்தார்.
இந்த சந்தர்ப்பத்திலேயே, போலித் துவாரகா பற்றிய செய்தி முதன்முதலாக ஊடகத்தில் வெளியானது. அது பரவலான கவனத்தை ஈர்த்ததும், வசூல் வேட்டை தொய்வடைந்தது. இந்த குழுவிற்கு பணம் கொடுத்த பலர் அவநம்பிக்கையை வெளிப்படுத்தினர்.
இதையடுத்தே, போலித் துவாரகா விவகாரத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தினார்கள். ஒருவேளை, ஊடகம் அப்பொழுது அந்த விவகாரத்தை வெளிப்படுத்தாமல் விட்டிருந்தால், இன்று இவ்வளவு அக்கப்போரும் நடக்காமல் விட்டிருக்குமோ என்னவோ!
தமது நாடகம் மீதான நம்பிக்கையீனம் ஏற்பட்டதும், அவர்கள் உடனடியாக டென்மார்க்கிலுள்ள பிரபாகரனின் மனைவியின் சகோதரி அருணாவை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர்களாகவும், விமான எதிர்ப்பு ஏவுகணைகளை பயன்படுத்தியவர்களாகவும் இந்த குழுவினர் மீது அருணா உள்ளிட்டவர்கள் ஏற்கெனவே அறிமுகம் இருந்ததுடன், மதிப்பையும் கொண்டிருந்தனர். அத்துடன், யுத்தத்தின் இறுதிநாள் வரை களத்தில் இருந்தவர்கள் என்பதும் அருணா தரப்பை, அவர்கள் மீது நம்பிக்கை கொள்ள வைத்திருந்தது.
அருணாவுடன் நடந்த தொலைபேசி உரையாடல்களை நன்கு அறிந்த- அடையாளத்தை வெளிப்படுத்தாத ஆதாரமொன்று ஊடகத்துடன் பேசிய போது- துவாரகா விவகாரத்தை அருணா முதலில் நம்பவில்லையென்றது.
“ஆயினும், ஏற்பாட்டாளர்கள் தொடர்ந்து அருணாவுடன் பேசி, அவரது மண்டையை கழுவி விட்டனர்“ என்றார்.
பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் பிரிவிலிருந்து நிமலன், வரதன், மிதுலன் போன்றவர்களும், மெய்ப்பாதுகாவலர் பிரிவு பொறுப்பாக இருந்த ஜெயகாந்தன் போன்றவர்களே, இதுதான் துவாரகா என அடித்து சொன்னால், அருணா சந்தேகத்துடன் நம்பியிருக்க வாய்ப்புள்ளதல்லவா.
அருணா சுவிசுக்கு அழைக்கப்பட்டு, போலித் துவாரகாவுடன் சந்திக்க வைக்கப்பட்டார். அந்த சந்திப்பின் பின்னர், துவாரகாவை நேரில் சந்தித்தேன், அவர் உயிருடன் இருக்கிறார் என அருணா கூறும் வீடியோ ஒன்று சுவிசில் வைத்தே பதிவு செய்யப்பட்டது. அந்த வீடியோ வெளியாகியுமிருந்தது. அந்த சமயத்தில் அருணா, சுவிசிலுள்ள மிதுலனின் வீட்டிற்கு வந்தார். அங்கு அழைக்கப்பட்ட சிலருடனான கலந்துரையாடலில், துவாரகா இருக்கிறார் என அருணா கூறியிருந்தார்.
துவாரகாவை நம்பியதற்காக அருணாவுக்காக பணம் வழங்கப்பட்டதா அல்லது, பின்னாளில் துவாரகா இல்லையென சந்தேகமடைந்தாலும் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடியின் அங்கமாகியுள்ளாரா என்பதை, சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர்- தற்போது அதிருப்தியடைந்துள்ளார்- விரைவில் பகிரங்கப்படுத்துவதாக ஊடகத்திடம் குறிப்பிட்டார். அதனால் அருணாவின் நாடக பாத்திரத்தை பற்றி மேலதிகமாக எதையும் குறிப்பிடவில்லை.
அருணா வழியாக நெடுமாறனுடன் பேசினார்கள். ஏனைய இந்திய தரப்பினரை நம்ப வைப்பதில் சிறி பங்காற்றினார்.
இந்த சமயத்தில்தான், துவாரகா நாடகத்திற்கு ஒப்பனை வழங்க வெளிநாடுகளில் இருந்த பழைய விடுதலைப் புலிகள் ஆதரவு செயற்பாட்டாளர்களையும், இந்த குழுவினர் இணைத்துக் கொண்டனர். ஏற்கெனவே வெளிநாடுகளில் உருட்டுக்கள் விட்டவர்கள்தான் இந்த பழைய ஆட்கள். நம்மையே தூக்கிக் சாப்பிடுகிறார்களே, இப்பொழுது வந்தவர்கள் என்ற பிரமிப்புடன், அவர்களின் நாடகத்தில் இணைந்து கொண்டனர்.
துணை நடிகர்கள்
பிரித்தானியாவில் சேரமான் என அறியப்படும், வராத்துப்பளையை சேர்ந்த சிறீஸ்கந்தராஜா ரஞ்சித். போலித் துவாரகா நாடகத்திற்கு தற்போது பங்களிக்கும் முக்கியஸ்தர்.
இவர், பிரித்தானியாவில் அன்ரன் பாலசிங்கத்தின் வீட்டிற்கு எடுபிடி வேலைகள் செய்து வந்தவர். கடைகளுக்கு பொருட்கள் வாங்க செல்வது, தமிழ் தட்டச்சு வேலைகள் செய்து கொடுப்பது, அவரைச் சந்திக்க வருபவர்களை ஏற்றி இறக்குவது போன்ற வேலைகளை செய்தார்.
அவர் பிரித்தானிய உளவு அமைப்பான எம்.16 இன் கீழ் செயற்படுகிறார் என்ற சந்தேகம், புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் மத்தியில் இருந்தது. 2009 இன் பின்னர் அவர் எந்த வேலையும் செய்யாமல், பல்கலைக்கழகமொன்றில் படித்து கலாநிதி பட்டம் பெற்றார். தமிழ் போராட்ட அரசியலில் சீர்குலைவை ஏற்படுத்தும் பணிக்கு கைமாறாக எம்.16 இனால் இவர் படிக்க வைக்கப்பட்டார், விடுதலைப் புலிகளால் சேர்க்கப்பட்ட பணத்தில் படித்தார் என பல ஊகங்கள் உள்ளன.
சில மாதங்களின் முன்னர், சுவிசிலுள்ள அப்துல்லா என்பவர், ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
துவாரகாவின் மோசடி நாடகத்தை வலுப்படுத்த, அப்துல்லா வெளியிட்ட அறிக்கை இது.
இந்த அறிக்கையை படிக்கும் போது, துவாரகா நாடகத்திற்கான தயார்ப்படுத்தல்களில் ஒன்று என்பது இலகுவாக புரியக்கூடியது.
கொக்குவிலை சேர்ந்த செல்லையா ஜெயபாலன் என்பவரே இந்த அப்துல்லா. 1987 வரை புலிகளின் யாழ் இணுவில் பிரதேச அமைப்பாளராக இருந்தவர். இந்தியா- புலிகள் சண்டை தொடங்கியதும், சுவிஸூக்கு எஸ்கேப் ஆகி விட்டார். பின்னர் புலிகளின் சுவிஸ் நிதிப் பொறுப்பாளர் ஆனார். ஆனால், அவர் மீது நிதி குற்றச்சாட்டுக்கள் எழுந்ததும், கே.பி என அறியப்படும் குமரன் பத்மநாதன் அவரை பொறுப்பிலிருந்து நீக்கினார். புலிகளின் பின்னாட்களில் கே.பியின் கீழிருந்த வெளிநாட்டு விவகாரங்கள் கஸ்ரோ வசமாக, எப்படியோ அவரை பிடித்து மீண்டும் பழைய பொறுப்பிற்கு வந்து விட்டார்.
சுவிஸ் உள்ளிட்ட பல நாடுகளில் பெரும் தொகை பணம் சேர்த்தவர்களில் முக்கியமானவர்களில் அப்துல்லாவும் ஒருவர். பின்னாளில் சாளியுடனான அறிமுகத்தால், இந்த நாடகக்குழுவில் இணைந்துள்ளார்.
பிரான்சில் வசிக்கும் ஈழமுரசு ஆதித்தன் (சந்திரன்). இவர் புங்குடுதீவை சேர்ந்தவர்.
பிரித்தானியாவில் வசிக்கும் சின்னையா சந்திர மௌலீசன். விடுதலைப் புலிகளின் மூத்த போராளி சீலன் 1983 இல் அல்லாரையில் இராணுவத்தின் சுற்றிவளைப்பில் காயமடைந்து, மரணமடைந்திருந்தார். அல்லாரையில் சீலன் தங்கியிருந்த வீட்டை ஒழுங்குபடுத்தி கொடுத்திருந்தவர் சந்திர மௌலீசன். அதன் பின்னர், பிரித்தானியாவிற்கு புலம்பெயர்ந்து விடுதலைப் புலிகளுடன் தொடர்பில்லாமல் இருந்தவர். தற்போது, போலி துவாரகாவின் கீழ் களமாட புறப்பட்டுள்ளார்.
யார் இந்த போலி துவாரகா?
சுவிற்சர்லாந்தின் சுவிற்சர்லாந்தின் துர்காவ் (Thurgau) மாநிலத்தில் வாழும் பெண்ணான சுயா என அழைக்கப்படம் இந்த மோசடி பேர் வழி. அவரை வைத்தே துவாரகா நாடகம் ஆடப்படுகிறது.
சுயா ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் செய்துள்ளார். அவர் நீண்டகாலமாக மோசடிப் பெண்ணாக இருந்துள்ளார் என்பது தற்போது வெளியாகும் தகவல்களின் மூலம் உறுதியாகிறது.
அவர் ஹனி ட்ராப் (காதல் உறவை பயன்படுத்தி பணமோசடியில் ஈடுபட்டுள்ளார்) வழியை பயன்படுத்தி பெரும் தொகை பணத்தை மோசடியாக பெற்றுள்ளார். காதல் உறவு தவிர, ஈழ விடுதலைப் போராட்டத்தின் பெயராலும் இந்த மோசடியை செய்துள்ளார்.
அமெரிக்காவில் வாழும் கோடீஸ்வர தமிழர் ஒருவரின் ‘சின்னவீட்டின்’ மகள் என ஒரு காலகட்டத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். இப்பொழுது துவாரகாவின் பெயரில் மோசடி செய்வதை போல, அப்பொழுது அந்த கோடீஸ்வரரின் பெயரிலும் மோசடி செய்திருக்கக்கூடும்.
இயல்பாகவே அவரிடமுள்ள மோசடி இயல்பு, மற்றொரு மோசடி குழுவின் பாத்திரத்தில் நடிப்பதற்கான துணிச்சலை வழங்கியுள்ளது.
சுஜாவின் பண மோசடிகள் பற்றிய பல தகவல்கள் இப்பொழுது வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சுஜாவின் பின்னணியை தமிழ்பக்கம் தேட ஆரம்பித்த போது, அவரது காதல் வலையில் சிக்கி பணத்தை இழந்த இளைஞர்கள் கொத்துக் கொத்தாக வந்து சிக்குகிறார்கள். அவர்களை மற்றொரு வரிசையில் நிற்க வைத்து விட்டு, இப்பொழுது துவாரகா மோசடி பற்றிய தகவல்களை வெளிப்படுத்துகிறோம். தேவைப்படின் சுஜாவின் காதல் மோசடிகளை பற்றியும் வெளிப்படுத்த தயாராக இருக்கிறோம்.
ஒரேயொரு உதாரணம்- தற்போது அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னின் உள்ள யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர். அவருக்கு அரசியல் செயற்பாடுகளுக்கும் தொடர்பில்லை. படகு மூலம் அவுஸ்திரேலியா சென்றவர். உழைத்து பணம் சம்பாதித்தார். பேஸ்புக்கில் சுஜாவின் அறிமுகம் ஏற்பட்டது. காதல் வலையில் விழுந்தார். தனக்கு சுவிஸ் குடியுரிமை உள்ளதாகவும், அந்த இளைஞனை சுவிசிற்கு அழைத்து திருமணம் செய்வதாகவும், இருவருக்கும் தங்கும் வீடு வாங்க வேண்டுமென குறிப்பிட்டு பெருந்தொகை பணத்தை மோசடி செய்துள்ளார். சுஜாவிற்கு 60,000 அவுஸ்திரேலிய டொலர் அனுப்பியதற்கான ஆதாரங்கள் தன்னிடமிருப்பதாக அந்த இளைஞர் குறிப்பிட்டார்.
பேஸ்புக் மோசடி ராணி தேசத்தின் புதல்வியான கதை
சுஜா துவாரகாவாக பரிணமிப்பதில் பேஸ்புக் முக்கிய பங்காற்றியுள்ளது. பேஸ்புக் வழியாகத்தான் சுஜா தனது மோசடிகளை ஆரம்பித்தார். இப்பொழுது இணையத்தளம் வழியாக, பேஸ்புக் வழியாக காதல் மோசடியில் ஈடுபடும் சிலர் பற்றிய தகவல்கள் வெளியாகி வருறதல்லவா- அப்படியான ஒரு ஒன்லைன் மோசடி ராணியே சுஜா!
சுஜா, விடுதலைப் புலிகளின் இறுதி சில ஆண்டுகளில் திருமணம் செய்தார். அவர் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்தவர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாகன சாரதியாக சில காலம் செயற்பட்ட இளஞ்செல்வம் என்பவரே சுஜாவை முதலில் திருமணம் செய்தவர். அவர்களின் திருமணம் முல்லைத்தீவு- வள்ளிபுனத்தில் நடந்தது. ஆனால் சுஜா போராளி அல்ல. அப்பொழுதுதான் சுஜா குழந்தையொன்றை பிரசவித்தார்.
யுத்தத்தின் பின்னர், இந்த தம்பதி இந்தியா வழியாக மலேசியா தப்பிச் சென்றனர். அங்கு வாழ்க்கை நெருக்கடி அழுத்த ஆரம்பிக்க- சுஜாவிற்குள் ஒளிந்திருந்த மோசடி சந்திரமுகி வெளிப்பட ஆரம்பித்துள்ளார்.
இளைஞர்களுக்கு பேஸ்புக் வழியாக காதல் வலை விரித்து, பண மோசடி செய்வதை மலேசியாவிலேயே ஆரம்பித்தார்.
சுஜா ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களை செய்துள்ளார். அவர்களில் சிலர்- பிரபாகரனுடன் நெருக்கமான படையணிகளை சேர்ந்தவர்கள். சுஜா அந்த போராளி வலையமைப்பில் பலருடன் நெருக்கமாக பழகியிருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
இந்த காதல் மோசடிகளில் ஈடுபட்ட சமயங்களில் அவர் திருமண உறவுகளிலும் இருந்துள்ளார். இதனால், அவர் தனது துணைகளிற்கு தெரிந்தே காதல் பண மோசடியில் ஈடுபட்டாரா அல்லது இரகசியமாக செயற்பட்டாரா என்பதும் மர்மமானது.
மலேசியாவில் இருந்த சமயத்தில், அமெரிக்க தமிழ் கோடீஸ்வரர் ஒருவரின் துணைகளில் ஒருவரின் மகள் என்றும் தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார். அப்படி என்னை வளர்க்க பணம் தருவதில்லை, அதனால் அவரிடம் பணம் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளேன், மில்லியன் கணக்கான டொலர்கள் எனக்கு கிடைக்கும், அந்த சமயத்தில் திருப்பி தருவேன் என குறிப்பிட்டும் பலரிடமிருந்து கடன் வாங்கி பண மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
மோசடியில் தொழில் தேர்ச்சியை வளர்த்த சுஜா, தான் திருமணம் செய்ததை மறைத்து, யுத்த காலத்தில் பதுங்குகுழிக்குள் இருந்து எடுத்த குழந்தையென தனது குழந்தையை குறிப்பிட்டுள்ளார். போராளிகளுக்கு உதவும் போர்வையில் பணத்தை கறக்க ஆரம்பித்தார்.
பின்னர், சுவிற்சர்லாந்திற்கு சென்ற பின்னரும், சுஜா பேஸ்புக் வழியாக பெரும் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். பெண் போராளிகளுக்கு உதவுவது, இராணுவத்தால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான பெண் போராளிகளின் மறுவாழ்வு, வெளிநாடுகளில் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் போராளிகளை மீட்பது என குறிப்பிட்டு பலரிடம் பெரும் தொகை பணத்தை மோசடி செய்துள்ளார்.
இப்படியாக சிறிது சிறிதாக ஆரம்பித்த மோசடியை சுஜா வேற லெவலுக்கு கொண்டு சென்றது, நமது தமிழ் சமூகத்தின் பலவீனத்தை நன்கு புரிந்து கொண்ட பின்னரே. பிரபாகரனின் பெயரை சொல்லி நன்றாக பணம் சம்பாதிக்கலாம் என்பதை தெரிந்ததும், தான் துவாரகாவுடன் வளர்ந்ததாக குறிப்பிட்டு பணம் சம்பாதித்துள்ளார். தலைவர், மனைவி, துவாரகா ஆகியோர் வெளிநாட்டில் பதுங்கியுள்ளனர், அவர்கள் நோய் வாய்ப்பட்டுள்ளனர். அவர்கள் பணத்தேவையால் சிரமப்படுகிறார்கள் என்றெல்லாம் உலக மகா உருட்டெல்லாம் உருட்டி, பணம் மோசடி செய்துள்ளனர்.
இந்த பின்னணியிலேயே, சுவிசிலுள்ள சாளி இந்தியாவுக்கு சென்று வந்த பின், துவாரகா நாடகம் ஆரம்பித்தது. ஒரு பேஸ்புக் காதல் மோசடி ராணி, தேசத்தின் புதல்வியான மர்மத்தின் இணைப்பு எப்படி ஆரம்பித்து என்பதே இப்பொழுதுள்ள கேள்வி.
துவாரகா நாடகத்தின் சூத்திரதாரிகளில் ஒருவர், சுஜாவுடன் திருமணத்துக்கு அப்பாலான உறவில் இருக்கிறார், அந்த அறிமுகத்திலேயே மித்துஜா இந்த நாடகத்தில் நடிக்க வைக்கப்பட்டுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.
மக்களுக்காக போராடிய இயக்கமொன்று சிதைந்து, அந்த பெயர் இப்பொழுது பணம் கொழிக்கும் பிராண்டாக உருவெடுத்துள்ளது மிகப்பெரிய காலத்துயர் அல்லவா!