அம்புலன்ஸ் படகு வர தாமதம்! 23 வயது தர்சன் உயிரிழப்பு
உழவு இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞனை வைத்திய சாலைக்கு கொண்டு செல்வதற்கு அம்புலன்ஸ் படகு வர தாமதம் ஆகியமையால் இளைஞன் உயிரிழந்துள்ளார், யாழ்ப்பாணம் – அனலை தீவு பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அனலைதீவை சேர்ந்த தர்சன் (வயது 23) எனும் இளைஞன் உழவு இயந்திரத்தில் பயணித்துக்கொண்டிருந்த வேளை தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த இளைஞனை கடல் தாண்டி ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்காக அம்புலன்ஸ் படகுக்கு உறவினர்கள் அறிவித்து காத்திருந்த போதிலும் , படகு வர தாமதமாகியது.
அதனால் கடற்படையினரின் விரைவு படகின் மூலம் இளைஞனை ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் இளைஞன் உயிரிழந்துள்ளார்.
இளைஞனை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்து இருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
தீவகத்திற்கான வைத்திய வசதிகளை செய்து தருமாறு பல வருடங்களாக தாம் கோரி வருகின்ற போதிலும் தீவகத்திற்கான வைத்திய வசதிகள் செய்து தரப்படவில்லை. கடல் தாண்டி வேறு வைத்தியசாலைக்கு செல்வதற்கு எந்நேரமும் கடலின் நிலைமை சாதகமாக இருக்கும் என சொல்ல முடியாது. ஆகவே தீவுகளில் உள்ள வைத்தியசாலையை மேம்படுத்தி வைத்திய வசதிகளை செய்து தருமாறு கோரினார்