வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் திருட வந்தவர்களை கொத்திய பாம்பு!

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் திருட வந்தவர்களை கொத்திய பாம்பு!

முல்லைத்தீவு, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் திருட வந்தவர்களை பாம்பு தீண்டியதால், அவர்கள் திருட்டு முயற்சியை கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்தது.

திருடர்கள் 3 பேர் கதவை உடைத்துக் கொண்டு ஆலயத்துக்குள் நுழைந்துள்ளனர்.

அவர்கள் கூரியஆயுதங்களையும் எடுத்து வந்திருந்தனர். ஆலயத்திலிருந்து பாதுகாப்பு கமரா இணைப்புக்களை துண்டித்து விட்டு, திருட திட்டமிட்டு, பாதுகாப்பு கமரா இணைப்பு பெட்டியினுள் ஒரு திருடன் கைவைத்துள்ளான். அதற்குள்ளிருந்த பாம்பு, திருடனை தீண்டியது.

இதையடுத்து, பாம்பு தீண்டிய திருடனை தூக்கிக் கொண்டு, மற்றைய இரண்டு திருடர்களும் அங்கிருந்து சென்றுள்ளனர்.

இந்த சம்பவங்கள் அனைத்தும் அங்கிருந்த பாதுகாப்பு கமராவில் பதிவாகியுள்ளது.

இதனடிப்படையில், ஆலய நிர்வாகத்தினால் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள வற்றாப்பளை அம்மன் ஆலயம், அதிசயங்கள் நிகழும் ஆலயமென பக்தர்கள் மத்தியில் நம்பிக்கையுள்ளது.

அங்கு வருடாந்தம் உப்புநீரில் விளக்கேற்றும் சடங்கு நிகழும். வருடாந்தம் பங்குனி விசாகப்பொங்கலுக்கு இலங்கை முழுவதிலுமிருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் ஆலயத்தில் குழுமுவதுண்டு.

இந்த திருட்டு விவகாரத்திலும், அம்மன் அதிசயம் காண்பித்துள்ளதாக பக்தர்கள் ஆலயத்தில் மெய்சிலிர்த்ததை காண முடிந்தது.