யாழ் சட்டத்தரணி கௌதமன் கள்ள உறுதி எழுதியத வழக்கில் நடந்தது என்ன?
காணி மோசடி வழக்கில் நீதிமன்றை தவறாக வழிநடத்தி, நீதிமன்ற அதிகாரத்தை கீழ்மைப்படுத்தினார்கள் என போலீசாருக்கு எதிராக சட்டத்தரணியால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை யாழ்.நீதிமன்றில் திங்கட்கிழமை நடைபெற்றது.
காணி மோசடி சம்பந்தமான வழக்கொன்றில் , சட்டத்தரணி வீரகத்திப்பிள்ளை கௌதமன் நீதிமன்றில் முன் பிணை பெற்றுள்ளார்.
அந்நிலையில் பொலிஸார் மன்றில் தாக்கல் செய்த அறிக்கை ஒன்றில், “மனுதாரர் தான் செய்த குற்றத்தை உணர்ந்து , பொலிஸார் தன்னை எந்நேரமும் கைது செய்யலாம் என்ற அச்சத்தில் பிணை விண்ணப்பத்தை செய்தார் ” என குறிப்பிட்ட வாசகம் , நீதிமன்றால் ஆக்கப்பட்ட கட்டளையை வேண்டும் என்றே தவறாக முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது என சட்டத்தரணி வீ.கௌதமன் சார்பில் பிறிதொரு சட்டத்தரணியால் மனு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த மனு மீதான விசாரணை நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற போது, தம்மால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் , மனுதாரர் சுட்டிக்காட்டிய வாசகத்தை திருத்தம் செய்து மேலதிக அறிக்கையை தாக்கல் செய்வதாக , பொலிஸார் அறிக்கையை தாக்கல் செய்தனர்.
அதனை தொடர்ந்து எதிர் மனுதாரர்களான பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் கான்ஸ்டபிள் ஆகிய இருவரையும் சொந்த பிணையில் செல்ல அனுமதித்த நீதவான் வழக்கை எதிர்வரும் 10ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
இதே வேளை வைத்தியசாலையில் மூதாட்டி இறந்து கிடக்கும் போதே அவரின் விரல் அடையாளத்தைப் பெற்று காணி உறுதி எழுதிய சம்பவத்துடனும் சட்டத்தரணி ஒருவர் தொடர்புபட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் கள்ள உறுதி எழுதி ஒரு சில சட்டத்தரணிகள் பெரும் பணம் சம்பாதித்து வருவதாகவும் இதனால் யாழ்ப்பாணத்தில் நேர்மையாக செயற்படும் சட்டத்தரணிகளுக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் சட்டத்துறையைச் சேர்ந்தவர்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.