அடித்த அடியில் இரத்தமாக சிறுநீர் வெளிியேறியது! கைதான இளைஞனின் நீதிமன்ற வாக்குமூலம்!!
சித்தங்கேணி இளைஞன் பொலிஸாரால் சித்திரவதை செய்து கொல்லப்பட்டமை தொடர்பாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் பல்வேறு உததரவுகளை பிறப்பித்தது. அடையாளம் காணப்பட்ட இரண்டு தமிழ் பொலிஸ் கான்ஸ்டபிள்களை கைது செய்து, நீதிமன்றத்தில் முற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் கைது செய்யப்பட்டு , சித்திரவதைக்கு உள்ளான நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தமை தொடர்பிலான வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று எடுத்து கொள்ளப்பட்டது.
வழக்கு விசாரணையில் பெருமளவான சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.
இன்று, உயிரிழந்த இளைஞனுடன் கைது செய்யப்பட்ட இளைஞன், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை சட்ட வைத்தியர், அராலி பகுதியை சேர்ந்த ஆயுர்வேத வைத்தியர் உள்ளிட்டவர்கள் சாட்சியமளித்தனர்.
திருட்டு வழக்கில் சந்தேகநபர்களாக 8ஆம் திகதி கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இருவரும் பொலிசாரால் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டு தாக்கப்பட்டிருந்தனர்.
தலைகீழாக கட்டித்தொங்கவிட்டு தாக்கியதாகவும், பெற்றோல் பையினால் முகத்தை மூடியதாகவும், இரும்பு கம்பியினால் இடுப்பில் அடித்ததாகவும் கைதான மற்றைய இளைஞன் சாட்சியமளித்தார்.கட்டிலிருந்து அவிழ்க்கப்பட்டதும், உயிரிழந்த இளைஞன் நிலத்தில் வீழ்ந்திருந்ததாகவும், சிறுநீரில் இரத்தம் வெளியேறியதாகவும் சாட்சியமளித்தார்.
நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு முன்னதாக அராலியிலுள்ள ஆயுர்வேத வைத்தியர் ஒருவரிடம் தம்மை அழைத்து சென்றதாகவும் குறிப்பிட்டார்.
குறிப்பிட்ட ஆயுர்வேத வைத்தியரும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகி சாட்சியமளித்தார். தன்னிடம் அழைத்து வந்தபோது, இளைஞர்கள் இருவரும் தாக்கப்பட்டு, கை தூக்க முடியமலிருந்ததாக தெரிவித்தார்.
ஆயுர்வேத வைத்தியர் இப்படியான சம்பவங்களில் சிகிச்சையளிக்க முடியாது என்பதை சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர். வட்டுக்கோட்டை பொலிசாரால் இவ்வாறு தாக்கப்பட்ட வேறு நபர்களும் அழைத்து வரப்பட்டிருந்தனரா என நீதிமன்றத்தில் கேள்வியெழுப்பப்பட்ட போது, இதுதான் முதல் சந்தர்ப்பம் என ஆயுர்வேத வைத்தியர் பதிலளித்தார்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த சிரேஸ்ட சட்டத்தரணி ந.சிறீகாந்தா நீதிமன்ற உத்தரவுகள் தொடர்பாக கருத்து தெரிவித்தார்.
“இன்று பிற்பகல் ஆரம்பாகி இதுவரை நடைபெற்ற மரண விசாரணையின் அடிப்படையில் யாழ்ப்பாண நீதவான் சில கட்டளைகள் வழங்கியது.
இன்றைய தினம் சாட்சி வழங்கிய 5 சாட்சியில் மூன்றாம் சாட்சியாக இருந்தவர் இறந்தவருடன் தானும் தாக்குதலுக்கு இலக்காகியதாக கூறியதை கொண்டு சாட்சி பெயர் குறிப்பிட்டு கூறிய இரண்டு பொலிஸாரை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் அத்தியட்சகருக்கு கட்டளையிட்டது.
பொலிஸ் நிலையத்திற்கு வெளியில் தாக்கப்பட்டதாக கூறியதையடுத்து, குறித்த இடங்களை விஞ்ஞான ரீதியாக அடையாளம் காண சாட்சியை அழைத்து செல்ல உதவி பொலிஸ் அத்தியட்சகரின் விண்ணப்பத்தமைக்கு ஏதுவாக நீதிமன்றம் கட்டளையிட்டது. இதன்போது சாட்சியின் பாதுகாப்பு கருதி இரண்டு சட்டத்தரணிகள் உடன் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்தது.
சாட்சியால் விபரமாக கூறப்பட்ட மூன்று பொலிஸாரின் அங்க அடையாளத்தை வைத்து மூவர் தொடர்பான விபரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
சாட்சியமளித்த சட்ட வைத்திய அதிகாரி மயூதரன் காயத்தை விபரித்ததோடு காயம் காரணமாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டதே பிரதான காரணம் என கூறியதன் அடிப்படையில் நீதிமன்றம் கட்டளையை வழங்கி இருக்கிறது.
மரண விசாரணைகளுக்கு பின்னர் சம்பந்தப்பட்ட பொலிஸார்
நாட்டை விட்டு வெளியேறாத வகையில் பிரயாணத்தடை பொலிஸார் மேற்கொள்ள முடியும் என நீதிமன்றம் பணித்ததால் உதவி பொலிஸ் அத்தியட்சகர் அதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதன்போது தங்களது விசாரணையில் நான்கு பொலிஸார் அடையாளம் காணப்பட்டதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் நீதிமன்றத்தில் தெரிவித்ததுடன் சாட்சியின் அடையாளத்தை கொண்டு மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.
இதுவொரு மனித உயிர் போக்கல் அல்லது ஆட்கொலை என்ற நிலைப்பாட்டுக்கு நீதிமன்றம் வந்துள்ளது.
குறித்த மரணம் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. இன்றைய நடவடிக்கையில் யாழ்ப்பாணம், வவுனியா என பல இடங்களில் இருந்தும் ஐம்பதுக்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் கலந்துகொண்டனர்.
விசாரணை தொடர்ந்து விரைவாக இடம்பெற ஏதுவாக எதிர்வரும் திங்கட்கிழமைக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.